20/03/2012

மருத்துவத்துறையில் போலிப்பல்கலைக்கழகங்கள் !

இந்த கட்டுரையை தொகுத்த - ஹீலர்.அ.உமர் பாரூக் ,M.Acu, D.Ed (Acu) . அவர்களுக்கு நன்றி.

இந்தியாவின் கல்விச்சந்தை இப்போது விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. உள்நாட்டுக் கல்வி நிறுவனங்களில் எவை அங்கீகாரம் உள்ளவை , எவை போலியானவை என்ற தெளிவு அரசுக்கு ஏற்படும் முன் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் இந்திய வருகை அதிகரித்துள்ளது. இந்திய அரசின் வியாபார அனுமதிக்காக பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் காத்துக்கொண்டிருக்கிற போது சில வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் சத்தமின்றி எவ்வித அனுமதியும் இல்லாமல் பல ஆண்டுகளாக தங்கள் வியாபாரத்தை இந்தியாவில் நடத்திக்கொண்டிருக்கின்றன. . . அதுவும் மருத்துவத்துறையில்!

இந்தியாவின் மருத்துவக்கல்வியில் ஆங்கில மருத்துவம், ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம், யூனானி, இயற்கை மருத்துவம். . போன்ற பிரிவுகளில்தான் பட்டப்படிப்பிற்கான அனுமதியும் அங்கீகாரமும் வழங்கப்பட்டிருக்கின்றன. அக்குபங்சர் மருத்துவத்தில் சான்றிதழ் படிப்பு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. மாற்று மருத்துவம் என்பது புரிந்துகொள்வதற்கான வார்த்தை தானேயன்றி அது ஒரு மருத்துவப்பிரிவு அல்ல. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் பல இந்தியாவில் அனுமதியின்றி பல பிரிவுகளில் முதுகலைப்பட்டங்களை வழங்கிவருகிறது. அக்குபங்சர், மாற்றுமருத்துவம், மூலிகை மருத்துவம், பாரம்பரிய மருத்துவம்..என்ற பெயர்களில் முதுகலை மருத்துவப்பட்டங்களை (M.D/Ph.D) இப்பல்கலைக்கழகங்கள் பல ஆண்டுகளாக இந்தியாவில் விற்றுவருகின்றன.

மாற்று மருத்துவங்களில் ஆர்வமுள்ள பலரும், ஆங்கில மருத்துவர்கள் சிலரும் கூட இப்பல்கலைக்கழகங்களில் பட்டங்களை விலைக்கு வாங்குவது நடைமுறையிலுள்ளது. வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் பெயர்களில் தரப்படும் முதுகலைப்பட்டங்கள் இந்திய அரசின் கவனத்திற்கு வரவே இல்லை. இதில் இன்னும் மோசமான விஷயம் இப்பட்டங்களை வழங்கும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் போலியானவை என்பதுதான்.

1980 களிலிருந்து மாற்று மருத்துவங்களில் போலியான பட்டங்கள் உலாவத்துவங்கிவிட்டன. அக்குபங்சர், மாற்றுமருத்துவம், மூலிகை மருத்துவம், பாரம்பரிய மருத்துவம் என்று எதையாவது குறிப்பிட்டு M.D ./ Ph.D போன்ற உயர் பட்டங்கள் விற்கப்படுவது நம் நாட்டு பல்கலை மானியக் குழுவிற்கும் (UGC) தெரியாது, வெளிநாட்டு விவகாரத்துறைக்கும் தெரியாது.

அப்படி ஒரு போலி பல்கலைக்கழகம் – இலங்கையிலுள்ள சர்வதேச திறந்தவெளி பல்கலைக்கழகம்! ( The Open International University for Comlementary Medicines,Colombo). இப்பல்கலைக்கழகம் இந்தியாவில் ஆயிரக்கணக்கான பட்டங்களை வாரி வழங்கியுள்ளது. இலங்கை பல்கலைக்கழக மானியக்குழுவின் (UGC) அங்கீகாரமும், இந்திய பல்கலை மானியக் குழுவின் (UGC) அங்கீகாரமும் இல்லாமல் பல ஆண்டுகளாக இந்நிறுவனம் கோடிக்கணக்கான ரூபாய்களை சுருட்டியுள்ளது.

இலங்கை சர்வதேச திறந்தவெளி பல்கலைக்கழகம் இயங்குவது ஒரு வீட்டின் கார் ஷெட்டிலுள்ள எட்டுக்கு எட்டு அறையில்தான்! பல நாடுகளில் கிளைகளுள்ள இப்பல்கலைக்கழகம் ஒரு அறக்கட்டளையாக இலங்கையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இலங்கையில் பல்கலைக்கழகம் என்ற சொல் சாதாரணப்புழக்கத்தில் கல்வி நிறுவனத்தை குறிப்பதாகும். இந்தியாவைப்போல பட்டங்களை வழங்க அதிகாரமுள்ள அமைப்பு அல்ல.

இப்பல்கலைக்கழகம் வழங்கும் சான்றிதழ்களில் பட்டங்கள் வழங்கப்பட்ட இடமாக கொழும்பு குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் பட்டங்களை வைத்திருப்பவர்கள் யாரும் இலங்கை சென்றிருக்கவோ பாஸ்போர்ட் வைத்திருக்கவோ கூட மாட்டார்கள். இப்பட்டங்களில் பதிவாளர் கையெழுத்து இருக்கவேண்டிய இடத்தில் தினசரி ஒரு நபர் கையெழுத்து இடுவார். இந்த பல்கலைக்கழகம் இது வரை யார்,யாருக்கு சான்றிதழ்களை வழங்கியுள்ளது என்ற பட்டியல் இதுவரை யாரிடத்திலும் இல்லை.

இப்போது இலங்கை சர்வதேச திறந்தவெளி பல்கலைக்கழகம் பட்டங்கள் வழங்குவதை குறைத்துக்கொண்டு V.I.P. களுக்கு கெளரவ டாக்டர் பட்டங்களை அதிகளவில் வழங்கிவருகிறது. இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் தான் இப்பல்கலைக்கழகத்தின் வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது. தமிழகத்தில் சென்ற வாரத்தில் கூட ஒரு V.I.P க்கு டாக்டர் பட்டத்தையும், ஒரு V.I.P க்கு “ஸ்டார் ஆப் ஆசியா” என்ற பட்டத்தையும் இப்பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.

இது போன்ற போலி பல்கலைக்கழகங்கள் பட்டங்கள் வழங்குவதோடு நிற்பதில்லை. மருந்துக்கம்பெனிகளுக்கு பாராட்டுச்சான்றிதழ்களையும் வழங்குகின்றன.

இந்தியாவின் பட்டங்கள் விற்பனையில் இலங்கைப் பல்கலைக்கழகம் போன்ற பல்வேறு பல்கலைக்கழகங்கள் களத்தில் உள்ளன. இத்தாலி நியூ ஏஜ் பல்கலைக்கழகம், அமெரிக்கா வெஸ்ட் கோஸ்ட் பல்கலைக்கழகம், ஹார்வுட் பல்கலைக்கழகம், கெல்லர் சர்வதேசப் பல்கலைக்கழகம், செபோர்கா பல்கலைக்கழகம் ..போன்ற பல பெயர்களில் போலியான பட்டங்களை விற்றுவருகின்றன.

மாற்றுக்கல்வி, சமச்சீர் கல்வி .. போன்ற கல்விகுறித்த சிந்தனைகள் வலுப்பெற்றுள்ள இக்காலத்தில் போலிப் பல்கலைக்கழகங்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு அவசியம் தேவை.